வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Wednesday, June 22, 2022

பாகம் -29

சட்டத்தை சட்டை செய்யாத சண்டியரை

சரணடைய செய்வது நல்லரசு.

_____________________________________________________

என்ன கிடைக்குமென எதிர்நோக்கி நடப்பவர்க்கு

கொடுத்தே கெடுப்பான் சிவன்.

_____________________________________________________

யோசிக்காது நேசித்து நமசிவாயென சுவாசிக்க

உன்னுள் மலரும் சிவம்.

_____________________________________________________

நடந்ததையே நினைத்து நாட்களை நகர்த்த

நரகமே நாளும் நமக்கு.

_____________________________________________________

முடியாதெது முடிந்தும் முடியாதெது என்றறிய

முடியா வயது 45.

_____________________________________________________

உன்னால் முடியும் என்பதால் உனக்குதவா

பொருளை வாங்குதல் மடமை.

_____________________________________________________

இலவசமென்று ஏதுமில்லை அப்படி கிடைத்தால்

நீதான் அங்கு விளைபொருள்.

_____________________________________________________

அன்பை மனதிலும் ஆத்திரத்தை பேச்சில்மட்டும்

உதிர்க்கும் உறவு வரம்.

_____________________________________________________

பணம் வாங்கி வாக்களிக்கும் மக்கள்

மாக்களாய் மட்டுமே மதிக்கப்படுவர்.

_____________________________________________________

மனங்கடந்த உயர் உணர்வின் உள்ளிருக்கும்

சத்தியாமான சாத்தியம் சிவம்.

Wednesday, September 8, 2021

பாகம் -28

மனதியங்க இன்பமும் துன்பமும் உருப்பெறும்
மனதுறங்க பேரானந்தம் நிலைபெறும்.
_____________________________________________________

மாற்றம் இல்லா மன்னிப்பு நம்மை
ஏமாற்றும் நல்ல நாடகமே.
_____________________________________________________

இருந்தும் இல்லாமல் இருந்தால் இறக்கும்வரை
இரந்து இருத்தல் இராது.
_____________________________________________________

நடந்ததை மறந்து நடப்பதை ரசிக்க
மனதில் பிறக்கும் மகிழ்ச்சி.
_____________________________________________________

அருவாய் உருவாய் அனைத்திலும், அசையாது
அசையும் அதிசயம் சிவம்.
_____________________________________________________

சிவனவன் கண்பட்டு பண்பட்ட மனதை
எச்சொல்லும் புண்படுத்த முடியாது.
_____________________________________________________

எளிதாம் உற்றோரை நோகடித்தல், அரிதாம்
அவரை மகிழ்வித்து மகிழ்தல்.
_____________________________________________________

நதியோ குருதியோ அதன் ஓட்டத்தை
நிர்ணயிப்பது பிரபஞ்சத்தின் விதி. 
_____________________________________________________

தவற்றை விட்டுவிட்டு, விட்டுக் கொடுத்து
தட்டிகொடுக்க மேம்படும் உறவு.
_____________________________________________________

நியதியை நிந்திப்பவரை நிதியில் நியமித்து
நீதி நேடுதல் நெடுங்கேடு.
_____________________________________________________

Sunday, April 4, 2021

பாகம் -27

நம்மை நோகடித்தவரை மன்னித்தலே நம்
மனதை குணப்படுத்தும் அருமருந்து.
_____________________________________________________

நம்பிக்கை இல்லாதார்க்கு நம்பியவரின் நம்பிக்கை
யாவும் மூட நம்பிக்கையே.
_____________________________________________________

வந்தவழி மறவாது வாழும் காலம்
யாவும் வசந்த காலமே.
_____________________________________________________

என்னால் எனது எனும் மாயை
மறையும் தருணம் மரணம்.
_____________________________________________________

நல்லறம் நழுவாது நக்கிப் பிழையாது
நடுநிலை நிற்கும் நல்லூடகம்.
_____________________________________________________

ஊர்பசி போக்க தன்பசி மறந்து
உழைத்து இளைத்தவன் விவசாயி.
_____________________________________________________

நொடியை யுகமாக்கி தவிக்க வைத்து
தளர்த்திடும் முதுமையில் தனிமை.
_____________________________________________________

சார்ந்து வாழாத தம்பதி சேர்ந்து
வாழ்வதில் பயன் இல்லை.
_____________________________________________________

வீழ்த்தியவர் வியக்க வாழ்தல் மேன்மை
வீழ்த்த வாழ்தல் மடமை.
_____________________________________________________

பிறப்பது இறப்பதற்கே என்பது உறைக்கும்
தருணம் நல்லுறவின் மரணம்.
_____________________________________________________

Sunday, July 12, 2020

பாகம் -26

திறன்சிறுத்த பெருலட்சியம் என்றும் ஏமாற்றம்
திறன்பெருத்த சிறுலட்சியமே ஏற்றம்.
_____________________________________________________

மனிதரிடம் பற்று உன்னை புண்படுத்தும்
படைத்தவனிடம் பற்று பண்படுத்தும்.
_____________________________________________________

எண்ணத்தில் நேர்மை நன்மைக்கு வழிகாட்ட
எதிர்மறையோ தீமையை தீண்டவைக்கும்.
_____________________________________________________

கைபிடிக்க கைக்கூலி கேட்பவன் கணவன்
எனும் போர்வையில் கயவன்.
_____________________________________________________

பசிபோக்கும் பணம் பலரிடம் உண்டு
மனமோ சிலரிடம் மட்டும்.
_____________________________________________________

தனக்கும் முதுமை உண்டென உணராதவரால்
முளைக்கின்றன முதியோர் இல்லங்கள்.
_____________________________________________________

இக்கரையல்ல எக்கரையும் வசபடாது உனக்கு
உன்மீது அக்கரையில்லை எனில்.
_____________________________________________________

கருவிலேயே பிரபஞ்சத்தை அறிந்தாய் அதனால்
தனித்துவ உருவில் பிறந்தாய்.
_____________________________________________________

சுலபமாய் கிடைத்ததால் உயிரையும் சில
உறவையும் நாம் மதிப்பதில்லை.
_____________________________________________________

வாழ்க்கைதுணை உனது பூர்வஜென்ம பாவ
புண்ணியத்தை எடுத்துரைக்கும் கண்ணாடி.
_____________________________________________________

Wednesday, December 12, 2018

பாகம் -25

உற்றவர் செய்வினை வதைத்தாலும் விட்டுகொடுக்க
இயலாது உருத்தி கொல்லும்.
_____________________________________________________

சிந்தை சிதைந்து பந்தம் சிதையும்
பாழ் ஊண் கள்ளால்.
_____________________________________________________

பாரந்தாங்கா மேகம் மழைத்துளி எனில்
மனந்தாங்கா பாரம் விழித்துளி.
_____________________________________________________

மாற்றான் குறை நோக்கிலர் இருக்கும்
தன் குறை அறிந்தவர்.
_____________________________________________________

படைப்பில் பிழையில்லா உருவமும் இல்லை
குறையில்லா மனிதரும் இல்லை.
_____________________________________________________

சுபநிகழ்வில் ஏற்றதாழ்வு பதிவாகும் இடம்
சீர்செய்யும் சீர்கெட்ட சபை.
_____________________________________________________

கொடைமறந்து கொடுத்ததை தானே கொண்டால்
கொடுத்தும் கெடுப்பான் இறைவன்.
_____________________________________________________

தர்மத்தை நாம் மறந்து வாழ்வதால்
அதர்மம் நம்மை ஆள்கிறது.
_____________________________________________________

உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உரைக்காது
ஊமையாய் உள்ளத்தை ஊனமாக்கும்.
_____________________________________________________

உற்றோரை உலுக்கி உறுத்தி உருகுலைத்திடும்
உற்ற உறவின் மனநோய் .
_____________________________________________________

பாகம் -24

உன் நேற்றைய நினைவின் நிகழ்வு
உன் இன்றைய வாழ்வு.
_____________________________________________________

விருந்தே ஆனாலும் பசித்து புசித்தால்
அருந்திய விருந்தே மருந்தாகும்.
_____________________________________________________

வாய்மூடி மசித்து ருசித்தால் சக்தி
பெருகிடும் சக்கை விலகிடும்.
_____________________________________________________

நேரத்தை மாற்ற இயலாதெனினும் மாற்றத்திற்கான
நேரமென உணர்வோர் உயர்வர்.
_____________________________________________________

நிகழ்காலத்திலும் இறந்தகாலத்தில் இருப்பவர்களால் என்றும்
எதிர்காலத்தை காண இயலாது.
_____________________________________________________

மூப்பிலும் சந்தி சிரிக்க வைக்கும்
மூளையை முடக்கும் கள்.
_____________________________________________________

அதீதஅன்பு பிரமிக்கபட்டு ரசிக்கபட்டு நாளடைவில்
சலித்திட ஒதுக்கப்பட்டு வெறுக்கபடும்.
_____________________________________________________

உன்னால் உதிர்ந்த கண்ணீர் பாவம்
உனக்காக உதிர்வது பாசம்.
_____________________________________________________

பிழையில்லா பொய்யான அன்பினும் பிழையுடனான
மெய்யான அன்பே சிறந்தது.
_____________________________________________________
தவறை சுட்டிக்காட்டும் உறவு வரவு
குத்தி காட்டுவதோ செலவு.
_____________________________________________________

Thursday, February 26, 2015

பாகம் -23

இன்பம் துன்பம் இரண்டும் அடுத்தவர்
தினிப்பன்று அவரவர் நினைப்பே.
_____________________________________________________

பரிட்சைக்கு பின் பாடம் புகட்டும்
பண்பட்ட ஆசிரியர் அனுபவம்.
_____________________________________________________
சொர்க்கம் கிடைக்க வேண்டி வாழ்வை
நரகமாக்கல் மனித மடமை.
_____________________________________________________
புரிந்த பிரியங்கள் பிரிந்திடின் புரிதலை
புரிய வைக்கும் பிரிவு.
_____________________________________________________
சலனமில்லா உடல் சவம் எனில்
மனமோ சிவ மாகும்.
_____________________________________________________
என்ன நடக்குமோ என்ற பயத்தினால்
எள்ளளவும் பலன் இல்லை.
_____________________________________________________
தன்னை தகர்க்கும் செயற்கைக்கும் கருப்பொருள்
தந்து உதவும் இயற்க்கை.
_____________________________________________________
கனவை கருக வைத்து குடும்பத்தை
கலங்க வைக்கும் கருச்சிதைவு.
_____________________________________________________
பசியில்லா உணவும் தோல்வியில்லா வெற்றியும்
என்றும் ருசிப்பது இல்லை.
_____________________________________________________
சில்லரை மனிதர்கள் வாங்க முடியாத
மொத்த வியாபாரம் நேர்மை.
_____________________________________________________

Saturday, November 29, 2014

பாகம் -22

எந்நிலை மாறினும் தன்னிலை மாறா
மனிதரை காண்பது அரிது.
_____________________________________________________

நகைச்சுவை நோய் தீர்க்க நகையின்
சுவை நிதி தீர்க்கும்.
_____________________________________________________

பணத்துடன் பாவத்தை சேர்த்து வைத்தால்
பாவமே பணத்தை பறித்திடும்.
_____________________________________________________

சாபமும் சாதகமாய் மாறும் சாதுர்யமாய்
சாதிக்கும் சாமர்த்தியசாலி இடத்து.
_____________________________________________________

உடலை உருவாக்கும் உடலுக்கு உருவாக்கத்
தெரியும் நோயின் மருந்து.
_____________________________________________________

விடியா இரவென்றும் விலகா பிணியென்றும்
வாழ்வில் என்றும் இல்லை.
_____________________________________________________

இருந்தார் இறந்தா ராயினும் இருந்த
இருப்பால் இறந்தும் இருப்பர்.
_____________________________________________________

முடியாதென முடிவெடுத்த பின் முயலும்
முயற்சி முடிவை தரா.
_____________________________________________________

எழில்கண்டு செய்யும் தொழில்கண்டு பிறரை
மதித்தலும் மிதித்தலும் மடமை.
_____________________________________________________

பயமில்லா பகட்டில்லா பக்தி பெற்றிடும்
பரவசநிலை யெனும் முக்தி.
_____________________________________________________

பாகம் -21

சுணக்கம் இல்லா சுய சிந்தனையை
சுடர்விட செய்யும் சுதந்திரம்.
_____________________________________________________

தளராது துவளாது துணிந்திடும் துணிவிடம்
பாயாது பயந்திடும் பயம்.
_____________________________________________________

துணிவாய் பணிவாய் கனிவாய் இனிவாய்
உயர்வாய் திறவாய் திருவாய்.
_____________________________________________________

உழையாதும் உயர்த்தும் உயிர் பிரிவதால்
உயிர் பெறும் உயில்.
_____________________________________________________

பிணி மறந்து பணி செய்யும்
பாச பட்டறை கருவறை.
_____________________________________________________

மதி மறைத்து பிதற்ற வைக்கும்
மனிதனின் கிறுக்கும் செருக்கும்.
_____________________________________________________

வலி மறந்து வாழ்வில் ஒளி
தேடும் திருநாள் தீபாவளி.
_____________________________________________________

மனவீட்டில் பணம் குடியேற மறுகணமே
மனங்குன்றி குடிபெயரும் குணம்.
_____________________________________________________

தகரமாய் இருப்பினும் குறைவில்லை துருவற்று
தரமாய் இருக்கும் வரை.
_____________________________________________________

பெரும்படை முன் வீழா மன்னனும்
மெல்லிடை முன் வீழ்வதுண்டு.
_____________________________________________________

Thursday, August 25, 2011

பாகம் -20

ஒன்றுபட்டு குரல் கொடுக்க - ஒடுக்கும்
அரசும் செவி மடுக்கும்.
_____________________________________________________

பிரார்த்தனை ஆராதனை பலன்தரா பகட்டிடம்
பக்தி பணியும் போது.
_____________________________________________________

சுணக்கம் இல்லா சுய சிந்தனையை
சுடர்விட செய்யும் சுதந்திரம்.
_____________________________________________________

வீம்பு வம்பை வளர்க்கும் வளரும்
வம்பு அன்பை தளர்க்கும்.
_____________________________________________________

பேதம் ஒழித்து சமத்துவம் பிறக்க
ஓதும் வேதம் காதல்.
_____________________________________________________

விரக்கடை அளந்து வண்டலில் விதைத்தாலும்
விளையாது சத்தில்லா விதை.
_____________________________________________________

இருமனம் இணங்கி பிணங்கி சுணங்கும்
இடியாப்ப சிக்கல் காதல்.
_____________________________________________________

இறங்கும் ஞாயிறும் உறங்கும் உள்ளமும்
என்றும் இருளை ஏற்றும்.
_____________________________________________________

மாயமோ மோகமோ மானிட சாபமோ
சகித்து சுகிக்கும் காதல்.
_____________________________________________________

இருப்பு இருப்பதால் இறுமாப்பு சுரக்கின்
இருப்பே நெருப்பாகி சுடும்.

Thursday, June 23, 2011

பாகம் -19

பரிவற்று பரிகசித்து பார்க்கும் துணையின்
பிரிவில் புரியும் பிரியம்.
_____________________________________________________

தெரியாது தெளியாது வாழ்வில் உதவாது
புரியாது விதைத்த கல்வி.
_____________________________________________________

திட்டை தடுக்கும் தடையெனாது தவறை
துடைக்கும் துணையென கொள்.
_____________________________________________________

சினம் கூட்டி குணம் சிதைக்கும்
கூடா நட்பின் பணம்.
_____________________________________________________
நிறம் இனம் பாராது குணம்
திறம் போற்றும் இறை.
_____________________________________________________

பற்று பற்றாகி பற்றற்று பற்றிடின்
முற்றற்று முற்றிடும் பகை.

_____________________________________________________

எல்லாம் எளிதாய் நடந்தால் இகழ்வாய்
தெரியும் உழைப்பும் உயர்வும்.
_____________________________________________________

உலகு உறங்குவது போல கிறங்கினும்
ஒருபாதி விழித்து கறங்கும்.
__________________________________________________________

காட்டுமிராண்டிகள் கூட கருணை கொள்வர்
நாட்டுமிராண்டிகளால் குமுறும் குடிகண்டு.
__________________________________________________________

இது இப்படிதான் அது அப்படிதான்
என்பார் எதுவும் புரியாதார்.

Saturday, May 7, 2011

பாகம் -18

முனைப்புடன் விதைக்கும் உழைப்பு வளர்க்கும்
செழிப்புடன் நன் மதிப்பு.
__________________________________________________________

எனதே என்றிராது நமதே என்றிருப்பின்
எளிதே பிறக்கும் நன்மை.
__________________________________________________________

நாவில் நற்சொல்லும் நெஞ்சில் நஞ்சும்
இனித்திடும் விஷம் போலாம்.
__________________________________________________________

மனித நேயம் மறந்து மதநேயமாகி
மண்ணில் மறையும் மனிதம்.
__________________________________________________________

அறுபதுகள் இருபதை புரிதல் எளிது
இருபதுகள் அறுபதை அறிவதினும்.
__________________________________________________________

எச்சரிக்கை அறியாது வாழ்வானும் உண்டு
எச்சரிக்கையாய் வீழ்வானும் உண்டு.
__________________________________________________________

மாற்றிட முடியுமா இயற்கையின் சீற்றத்தை
இறுமாப்பு மனிதனின் இயல்கள்.
__________________________________________________________

மனதில் மரித்து உதட்டில் சிரித்தாலும்
உள்ள(த்)தை உரைத்திடும் கண்.
__________________________________________________________

பட்டம் பெற்றோர் பட்டம் விட்டாலும்
நூலில்லா பட்டம் பாழ்.
__________________________________________________________

போட்டியில் போட்டியிடாது வாழ்வில் போட்டியிட
வாழ்க்கை நொடிந்து வாடிடும்.
__________________________________________________________

Thursday, December 30, 2010

பாகம் -17

இல்லாதோர் பலமைல் புசிக்க நடக்க
இருப்போர் நடப்பர் செரிக்க.
__________________________________________________________

மறதி மன்னிப்பை மனிதன் மறக்க
மறைந்திடும் மன அமைதி.
__________________________________________________________

தாழ்ந்தவர் உயர்ந்தவர் தகுதி தரத்தினால்
அன்றி வளத்தினால் அல்ல.
__________________________________________________________
மாயமோ மந்திரமோ மாற்றுமோ மக்களை
முட்டாளாக்கி முடக்கும் மந்திரிகளை.
__________________________________________________________

தெரியாதார் தெரியலாம் தெரிந்தும் தெளியாதார்
தெரிந்ததால் திரிந்து துயருறுவர்.
__________________________________________________________

மாற்றாகும் மாற்றங்கள(பெரும்பாலும்) மன மகிழ்வுதரும்
உடல் மழுங்க வைக்கும்.
__________________________________________________________

உயிருடன் வாழ்தலினும் உயிர்ப்புடன் வாழ்தலே
வாழ்வில் உயர்வு தரும்.
__________________________________________________________

இன்பமே என்னாளும் துன்பம் இல்லை
ஈடில்லா இறையருள் பெறின்.
__________________________________________________________

தவறி தவறலினும் தவறாகும் என
நம்பி தவறல் தவறு.
__________________________________________________________

மது உண்டு மதி கெட்டபின்
விதி நொந்தென்ன பயன்.

Friday, November 12, 2010

பாகம் -16

ஆணவம் தன்னுள் ஆனந்தத்தை மறைக்க
வெளியே தேடும் மானிடம்.
__________________________________________________________

பழுதாகி புண்பட்டாலும் புரை நீக்கி
பழுதகற்ற பண்படும் மனம்.
__________________________________________________________

நினைத்தது நினைத்தபடி நிலைக்காத போதும்
நிலைப்பது நிகரில்லா நல்லனுபவம்.
__________________________________________________________

திருந்த வைக்கும் அறிவுரை பரிசு
வருந்த வைப்பதோ தரிசு.
__________________________________________________________

நானென்று இருத்தல் என்றும் நலிவு
நாமென்று இருத்தலே வலிவு.
__________________________________________________________

அதிகாரம் ஆளுமை மட்டும் இருக்கும்
இடத்து இருப்பதில்லை அன்பு.
__________________________________________________________

வழிகாட்டல் வற்புறுத்தலிடை வித்யாசம் சிறிது
அதன் வினை பெரிது.
__________________________________________________________

தன்செயல் பிறர் போற்றல் பெருமை
தானே போற்றல் சிறுமை.
__________________________________________________________

சறுக்கல் இல்லா வாழ்வின் சாரம்
சலனம் இல்லா சந்தோஷம்.
__________________________________________________________

நன்மையும் தீதென திரிந்து தெரியும்
வெறுப்போர் செய்தார் எனின்.
__________________________________________________________

Saturday, October 2, 2010

பாகம் -15

உறவு உயர்ந்திடும் உள்ளம் இணைந்திடும்
உற்றோரை உளமார பாராட்ட.
__________________________________________________________

தரம் கூட்டும் உரம் தரமில்லையெனில்
உரமிட்டு என்ன பயன்.
__________________________________________________________

பணங்கண்டு குணம் மாறும் உறவு
விளக்கு இல்லா இரவு.
__________________________________________________________

பண்பிடம் பணிவும் பகையிடம் துணிவும்
பலம் தரும் குணமாம்.
__________________________________________________________

மென்மையாய் மொழிவதால் மெய்யென திரிந்து
உயர்ந்து விடாது பொய்.
__________________________________________________________

உன்னை உள்ளூர உணர உள்ளம்
உருகும் உன்னதம் ஊறும்.
__________________________________________________________

உண்டு உண்டிமட்டும் பெருக்கி உழலும்
மனிதரிடம் உண்டோ மதி.
__________________________________________________________

பக்தரின் பக்தி பழுதானால் பரிசுத்த
பகவானை பழுப்பென பழிப்பான்.
__________________________________________________________

பேசி தெரிதலினும் நேசித்து அறிதல்
பிரியா உறவின் வலிவு.
__________________________________________________________
வீட்டை விட்டு வெளியே வராதவரை
தெரிவதில்லை விடியலின் கரை.

Saturday, September 4, 2010

பாகம் -14

அறிவுக்கண் திறவும்போது இதயகண் பழுதானால்
அழிவே அறிவின் பயன்.
__________________________________________________________

வீழ்ந்தே வாழ்வினும் தாழ்ந்து வாழ்வதில்லை
எழுச்சியுடன் விழும் நீர்வீழ்ச்சி.
__________________________________________________________

ஆலம் விழுது விழுவது வீழ்வதற்கல்ல
பலமுடன் பலநாள் வாழ்வதற்கு.
__________________________________________________________

வீழ்ந்தாலும் வெகுண்டு எழுதலே வாழ்வின்
விடியலுக்கு வித்திடும் விதை.
__________________________________________________________

ஊசியால் தினம்தினம் உருகுலைவதினும் வாள்
வீசி வீழ்வது மேல்.
__________________________________________________________

எதிர்பார்ப்பில்லா அன்பென்பது இல்லை ஏனெனில்
எதிர்பார்ப்பின் அது அன்பில்லை.
__________________________________________________________

பொருட்செல்வம் தேடி அருட்செல்வம் தொலைத்து
உடமையின் அடிமையாதல் மடமை.
__________________________________________________________

எதிலும் எதிர்பார்த்து ஏங்கும் உறவு
என்றும் இணையா பிளவு.
__________________________________________________________

பெற்ற பிறந்த பெற பிணைந்த
உறவில் மட்டுமே உரிமை.
__________________________________________________________

மும்மையெண்ணி முடங்காது மறுமையெண்ணி மருளாது
இம்மையை ஏற்றலே நன்மை.

Saturday, June 5, 2010

பாகம் -13கண்டிப்பு தண்டிப்புடன் பண்பை போதிக்கும்
பெண்ணிடம் பெற்றவளின் பாசம்.
__________________________________________________________

கண்டிப்பு இல்லாது கரிசனம் காட்டும்
ஆணிடம் அன்னையின் அன்பு.
__________________________________________________________

சண்டை சமாதானத்துடன் சகிப்பும் சேர்ந்து
சுரக்கும் சகோதர சிநேகம்.
__________________________________________________________

விரும்பி முகம் அரும்பி விருந்தோம்பின்
வயிறொடு நிறையும் மனம் .

__________________________________________________________

சிறு பிழைக்கண்டு பகை போற்றாது
பிழை பொறுத்தல் பண்பு.
__________________________________________________________

எதிரியை அறிதல் எளிது நல்
நண்பனை அறிதல் அரிது.
__________________________________________________________

இன்றை நிராகரித்து நேற்றால் நொந்தலும்
நாளைகண்டு நடுங்கலும் இழிவாம்.
__________________________________________________________

குழந்தையின் குறைகண்டு குரையாது நிறையை
தட்டிக்கொடின் குறை குறையும்.
__________________________________________________________

இல்லாதோர் இயலாமையை இருப்போர் இகழ்ந்து
எள்ளல் ஏளனச் சிரிப்பு.
__________________________________________________________

வாழ்வில் வெற்றி விடியலின் விடை
உழைப்பில்லா சோம்பலின் விடை.

Wednesday, May 19, 2010

காதல் கல்லறை

இளமை திமிரில்
இச்சை கொண்டு
இல்லம் மறந்து
இசைந்து செல்ல

இரயில் ஆனாலும்
என்னவன் விரும்ப
என்னை முழுதாய்
விருந்தாய் படைக்க

விழித்து பார்த்தால்
வீதியில் நான்
நாயகனும் இல்லை
நகையும் இல்லை

எச்சில் இலையாய்
விழுந்த என்னில்
மிச்சம் பார்த்து
எச்சிலை நாய்கள்

நித்தம் நித்தம்
என்னை சுகிக்க
உயிர் வேண்டி
நானும் சகிக்க

வாடிய பின்னும்
தான் இன்புற
என்னை இம்சித்து
ரசித்த சுற்றம்

உணவின்றி
உயிர் மறித்து
உடல் எரித்த
பின் தான் விட்டது
என்னை....

நாட்டில் எண்ணிக்கை
கூடியதால் தான்
காட்டில் விலங்குகளின்
எண்ணிக்கை குறைந்தனவோ...
(காதலால் கற்பிழந்து தன்னிலை இழந்து கல்லறை செல்லும் வரை மனித மிருகங்களால் களங்கபட்ட மஹாவிறுக்கு...

நேசித்த பாவத்தால்
வேசி ஆனவள்
)

பாதித்ததால் பதித்தேன்
இப்பதிவு
உங்களை பாதித்தால்
என்னை மன்னிக்கவும்...

Sunday, March 14, 2010

பாகம்-12புரியாபோதும் பிறர் சிரிக்க நாம்
சிரித்தல் கட்டாயச் சிரிப்பு.
__________________________________________________________

சபை வேண்டி சண்டைகாரர் ஆயினும்
சுமக்கும் சிரிப்பு புன்சிரிப்பு.
__________________________________________________________

இல்லா இடத்தில் இருக்காது -இருக்கும்
இடத்தில் இல்லை இருக்காது.

__________________________________________________________

என்னாளுமே பொன்னாளாக விண்ணாள எண்ணாது
உனையாள உள்ளம் உறுதிசெய். __________________________________________________________

வலி இல்லா வாழ்வில் வழியும்
இல்லை ஒளியும் இல்லை.
__________________________________________________________

இன்பம் சுருங்கி இன்னல் பெருகும்
உள்ளம் இறுகும் எனில்.

வெறுப்புடன் விட்டு கொடுத்தலினும் விருப்புடன்
புரிதல் கூட்டும் பயன்.
__________________________________________________________

தொடங்கும் வேலையில் அடிப்படை முதலடி
தயார்நிலை எனும் வெற்றிப்படி.
__________________________________________________________

இறங்குவார் என்று இறுமாப்பாய் இல்லாது
இறங்கலே இறுக்கம் இறக்கும்.
__________________________________________________________

விதித்தபடி வாழ்வென வாழாது நீ
வித்திட்டபடி வாழ்தல் வலிவு.
__________________________________________________________

Saturday, February 13, 2010

பாகம்-11

தவம் நிதம் செய்யினும் பதம்
இல்லா மனம் பாழ்.
__________________________________________________________

துவங்குவதை துவங்காது துவங்கிய துவக்கங்கள்
துவங்கிய பின்னும் துவங்குவதில்லை.
__________________________________________________________

இன்பம் சுருங்கி இன்னல் பெருகும்
உள்ளம் இறுகும் எனில்.
__________________________________________________________

காலம் மாற ஞாலம் மாற
நாமும் மாறலே நலம்.
__________________________________________________________

மஞ்சமே தஞ்சமென மருளாது நெஞ்சத்தை
மகிழ்வித்து மகிழ்பவன் நல்மனிதன்.
__________________________________________________________

மறப்போம் மக்களை மழுக்கி மகிழ்வில்
மருளும் மன்னர்களை மறுப்போம்.
__________________________________________________________

உணர்ச்சிபூர்வ முடிவினும் உரிய உத்திகள்
உடனான முடிவுகள் உரவு.
__________________________________________________________

உயர்வை காட்டும் வளமை என்றும்
எளிமை கூட்டும் வலிமை.
__________________________________________________________

சிகரம் மற்றும் வாழ்வில் ஏற்றம்
சிரமம் இறக்கம் எளிதாம்.
__________________________________________________________

அறியா இயல்கள் இயலா தெனும்
இயல்கள் அறியும் அறிவியல்.